கடந்த சனிக்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் பணம் பெற்றதாக என வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதைதொடர்ந்து, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தமிழக டிஜபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. 

தொடர்ந்து இன்று 2வது நாளாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், தனது அறிக்கையில், சிபிஐ சோதனையை வைத்து, குற்றஞ்சாட்டுவதால் நான் குற்றவாளி அல்ல என தெரிவித்துதுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நான் சந்திக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி, தன்னை அரசியலில் இருந்து அழித்து விடலாம் என சிலர் மனப்பால் குடிக்கின்றனர். இது தொடர்பாக எந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன். 

சிபிஐ சோதனைக்கும் தான் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதைபோல, பொதுச்சேவையில் ஈடுபடும் என்னை போன்றவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் எதிரிகள் எழுப்புவது இயல்புதான். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். எனக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு பிரச்சனையில் இருந்து வெளிவருவேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.