தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி குருநாதராக இருக்கலாம் என தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்; கடந்த 22ந்தேதி முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதாக  எம்எல்ஏக்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கூறினோம்.  அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை, அதுமட்டுமல்ல ஆளுநர் குதிரை பேரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது, காலம் தாழ்த்தாமல் நல்ல தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளோம்.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, விரைவில் நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜக்கய்யன் திடீரென்று எடப்பாடி அணிக்கு ஆதரவு கொடுத்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் எதிர் தரப்பினர், மிரட்டுவதாக ஜக்கையன் எம்.எல்.ஏ என்னிடம் தெரிவித்தார். அதன்படியே அவர் தற்போது எடப்பாடி அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும், எடப்பாடி அணிக்கு போக விரும்பினால் போகலாம் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை.

பழனிசாமி, பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று தினகரன் கூறினார். 

மேலும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் ஆலோசனைப்படி அவர்கள் நடந்துகொள்கிறார்களா என கேட்டதற்கு எடப்பாடிக்கும் பன்னீருக்கும் குருமூர்த்தி குருநாதராக இருக்கலாம் என கூறினார்.