மிகுந்த பரபரப்புடன் குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று நடந்து முடிந்தாலும் ஓட்டு எண்ணிக்கையில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறி வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மாறி மாறி தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறி வருகின்றனர்.

இதையடுத்து காங். சார்பில் ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்களும்,  பாஜக  சார்பில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ரவிசங்கர்பிரசாத், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரும் டில்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

குஜராத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர்,  அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  அகமது பட்டேலை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பாஜக முயற்சி செய்தது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர்..

ஆனால்  அகமது பட்டேல் வெற்றி பெற 46 எம்எல்ஏக்கள்  தேவை என்பதால் மீதமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கட்சி மாறாமல் இருக்க பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர்  அவர்கள் மீண்டும் அகமதாபாத் அழைத்துவரப்பட்டு இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க வைக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் காங்கிரஸ் கட்சி சார்பில் .தேர்தல் ஆணையத்திடம்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்களது கட்சி எம்எல்ஏக்கள் பாஜக  தூண்டுதலால்  அணிமாறி வாக்களித்துள்ளதாகவும் அந்த 2 வாக்குகளை  செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆன்ந்த் சர்மா, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர்  இந்த புகாரை அளித்தனர்.

இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்துள்ள மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன்,பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, ஆகியோரும் தேர்தல் ஆணையத்தில் இரு குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் ஆணையர் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருவதால்  தேர்தல் ஆணைய அலுவலகம் பரபரப்பாக உள்ளது.