கூடலுார் தொகுதி திமுக எம்.எல்.ஏ. திராவிடமணி காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரை தெரு நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த திராவிடமணி உள்ளார். இவரது வீடு பந்தலூர், எம்.ஜி.ஆர் நகரில் உள்ளது. திராவிடமணி எப்போதும் காலை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நடைபயிற்சியின் போதே பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருவார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது, பந்தலூர் பகுதியில் அவர் வந்துக்கொண்டிருந்த போது தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி அவரை தொடை பகுதியில் கடித்தது. இதனையடுத்து, வலியால் துடித்துக்ஙகொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டு வீடு திரும்பினார். 

இதனால் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கையில், தடியுடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.