கருத்தொற்றுமை ஏற்படாத ஜிஎஸ்டி - மாநிலங்கள் போர்க்கொடி
ஜிஎஸ்டி மசோதாவில் நான்கு கூட்டங்கள் நடந்தும் மாநிலங்கள் தொடர்ந்து ஆட்சேபணை தெரிவித்துவருவதால் நிதியமைச்சர் தலைமையில் தொடர்ந்து 5 வது கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல் செய்வது தொடர்பாக தில்லியில் இன்று மாநில அமைச்சர்கள் கூட்டம் 2 வது நாளாக நடந்து வருகிறது. இதில் தமிழகத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை என்பது 18 விதமான வரிகளை உள்ளடக்கியது. ஐஜிஎஸ்டி , சிஜிஎஸ்டி, ஜிஎஸ்டி காம்பன்சேஷன் , மாடல் ஜிஎஸ்டி நான்கு விதமான வரி விதிப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகிறது.
இதில் மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக இதுவரை 4 கூட்டங்கள் நடைபெற்றது . ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படாததால் 5 வது கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
இந்த ஜிஎஸ்டி மசோதா மாநிலங்கள் ஏற்றுகொண்டு அறிமுகப்படுத்தப்பட்டால் மறைமுக வரிவிதிப்பு ரத்து செய்யப்படும். செப்.16 2017 க்குள் ஜிஎஸ்டி சட்டம் அமல் படுத்தப்படாவிட்டால் எந்த அரசும் மறைமுக வரி பிறப்பிக்க முடியாது.
அரசின் 80% மேற்பட்ட வருவாயே மறைமுக வரியின் மீதுதான் வருகிறது. ஆகவே ஜிஎஸ்டி சட்டம் வருவதன் மூலம் இது நீக்கப்பட்டு ஜிஎஸ்டி சட்டம் அமல் படுத்தப்படும்.
அதே நேரம் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டிய ராஜன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்துக்கு ஏற்படும் இழப்புக்கு நிதி வழங்குவதாக மத்திய அரசு ஒத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு முறையை அமல் செய்வதன் மூலம் நிதி இழப்பு ஏற்படும் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இன்றைய கூட்டத்தில் வரி விதிப்பு முறை குறித்து கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. மேலும் தமிழகத்திற்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

