மக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில்ஜூலை 1 காலை இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது அலகு பகுதியில், திடீரென கொதிகலன் வெடித்துச் சிதறியது. இதில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில்..

"இன்று நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலைய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததற்கும், பல பேர் பாதிக்கப்பட்டிருப்பதற்கும் காரணம், ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் தொழிற்சாலையின் பராமரிப்பு, பாதுகாப்பு விஷயங்களில் இருக்கும் அசட்டையும், அலட்சியமுமே. கடந்த மூன்றே மாதங்களில் நடந்திருக்கும் இரண்டாவது விபத்து இது என்பது தொழில் வளர்ச்சியில், பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நம் முகத்தில் அறைந்து உரைத்திருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு இந்த விபத்து கடக்கப்படக் கூடாது. 2019-ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி, 2020 மே மாத விபத்தில் 6 பேர், இன்றைய விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளது, இவ்விபத்துகள் தொடர்வதையே காட்டுகிறது. வளர்ச்சி என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் நான் வலியுறுத்தியிருக்கிறேன். மக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் எவ்வளவு அவசியமோ அதே அளவு அந்தத் தொழிற்சாலைகள் சட்ட விதிமுறைகளை மீறாமல், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் முக்கியம். விபத்துக்கள் நடக்கும்போது மட்டும் தொழிற்சாலைகளின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் பற்றி யோசிக்காமல், ஒவ்வொரு தொழிற்சாலையும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளையும், விதிகளையும் பின்பற்றுகிறதா என்பதை அரசு தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே, இது போன்ற விபத்துகளைத் தடுக்க முடியும். 30 ஆண்டுகள்தான் ஒரு கொதிகலனின் ஆயுட்காலம். சரியான பராமரிப்புகள் இருந்தால் அதன் ஆயுள் மேலும் சில ஆண்டுகள் வரும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். அந்தப் பராமரிப்பு நடக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையத்தில் உள்ள அனைத்து அலகுகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்புப் பணிகள் குறித்து விசாரித்து இனியொரு விபத்து நடக்காமல் தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒரு பொது மேலாளரை பணியிடை நீக்கம் செய்து அரசு தண்டனை வழங்கிவிட்டது போன்று பொறுப்பைத் துறந்து விடக் கூடாது. இழப்பீடுகள், நிவாரணங்கள் மட்டுமின்றி மக்களின் உயிரையும், தொழிலாளர்கள் நலனையும் காத்திட இனியேனும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".