Green signal to matriculate schools who want to switch to CBSE
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற விரும்பும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி என மொத்தம் 58,000 பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. கடந்த கல்வியாண்டுவரை தமிழகத்தில் 600 பள்ளிகள் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்பட்டன.
நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத்தேர்வு போன்றவற்றை சிபிஎஸ்இ நடத்துவதால் பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டன. ஆனால் மாநில அரசு தடையில்லா சான்று கொடுக்க தயங்கிய நிலையில், சில பள்ளிகள் மட்டும் அரசியல்வாதிகளின் தலையீடு மூலம் பணம் கொடுத்து தடையில்லா சான்று பெற்றனர்.
ஆனால் நீட் தேர்விலிருந்து இனி விலக்கு பெற முடியாது என்ற நிலை வந்துவிட்டதால், இனிமேல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறவிரும்பும் பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி தடையில்லா சான்று வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 500 மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற தடையில்லா சான்று பெற்றுள்ளன. இவையனைத்தும் அடுத்த கல்வி ஆண்டுமுதல் சிபிஎஸ்இ அந்தஸ்து பெறுகின்றன.
