கிராமசபை கூட்டத்தை என்னைப்பார்த்து காப்பியடிக்க மு.க.ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? எனக் கேட்ட கமல்ஹாசனுக்கு விளக்கமளித்து வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கிராமசபை கூட்டத்தை நான் நடத்திய பிறகு தான் திமுக சார்பில் கிராமம் கிராமமாக மு.க.ஸ்டாலின் செல்கிறார். அதற்காக அவர் வெட்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து முரசொலியில் கமல்ஹாசனை தாக்கி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தனது ட்விட்டர் பதிவில் ‘’கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் எனக்கூறி... நான்கு புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் உளறல் நாயகன் கவனத்திற்கு என பதிவிட்டு திமுக சார்பில் ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்களை தேதி வாரியாகவும், ஊர் வாரியாகவும் பதிவிட்டு இருந்தார். கன்னியாகுமரியில் செப்டம்பர் 21ம் தேதியும், திண்டுக்கல்லில் செப்டம்பர் 29ம் தேதியும், அக்டோபர் 12ம் தேதி கரூரிலும் கலந்து கொண்டதாக பதிவிடப்பட்டு இருந்தது. 

 

இந்தப்பதிவை விமரிச்த்து வரும் மக்கள் நீதிமய்ய தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக கலாய்த்து வருகின்றனர். அதில், ’’கமல் அரசாங்கம் சார்பாக நடைபெறும் கிராம சபையிலே காஞ்சிபுரத்தில் கலந்து கொண்டார். உங்களை போல நூறு நாள் வேலை ஆட்களையும், பணம் கொடுத்தும் கூட்டம் கூட்டி மக்கள் சந்திப்பை நடத்தவில்லை’’.

தயாரிப்பாளர் நடிகர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களே, வருடத்தில் 4 நாட்கள் அதாவது ஜனவரி 26, மே-1, அக்டோபர் -2 ஆக்ஸ்ட்-15 ஆகிய நாட்களில் மட்டுமே கிராமசபை கூட்டம் நடைபெறும். நீங்கள் கூறிய நாட்களில் அல்ல.’’ ‘’ திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். ஒரு முறை  மக்கள் நீதி மையம் ஆட்சி அமைக்க வழி விடுங்கள்!  திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி அமைத்தது போதும். ஒரு முறை மாற்றத்தை பார்ப்போம்!’’

’’ஏன் பாஸ் சும்மா இருந்த ஆள முரசொலில கட்டுரை எழுதி உசுப்பேத்தி விட்டுட்டீங்க... ரஜினிக்கு போட்ட மாதிரி ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருந்தா முடிஞ்சுருக்கும்... கட்சி பிரச்சாரம் பண்ண போயிட்டு கிராம சபைக்கூட்டம்னு புலுகாதீங்க மூன்றாம் கலைஞரே! நேற்றே உங்களுக்கு சொன்னது தான். ஆட்சியில் இருந்த போது ஒருமுறை ஒப்புக்கு சென்றுவிட்டு, 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது ஏன்? தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் கூட இதுவரை ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை ஏன்? ஆட்சியில் இருந்தபோதும், தற்போதும்கூட பென்சன்கூட வாங்கித்தரமுடியவில்லையே ஏன்?’’ என்றெல்லாம் கேட்டு உதயநிதியை திணறடித்து வருகின்றனர்.