மூத்த பத்திரிகையாளரும், போராளியுமான கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அறிவித்தார்.

சுட்டு கொலை

பெங்களூரில் லங்கேஷ் பத்ரிகை என்ற வாரப்பத்திரிகையை நடத்தி வந்தவர் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்ேஷ். முற்போக்கு சிந்தனையாளரான கவுரிலங்கேஷ் மதவாத சக்திகளை கடுமையாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு கவுரியை அவரின் வீட்டுமுன், மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.

அதிர்ச்ச்சி, போராட்டம்

இது குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொல்லப்பட்ட கவுரி லங்கேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். மேலும், அந்த பகுதியைச் சுற்றி இருக்கும் கண்காணிப்புகேமிராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை நாடுமுழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள்  மதசார்பின்மையை ஆதரிக்கும் பிரிவினர் , அரசியல் கட்சிகள் ஆகியோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரில் மக்களும் நேற்று பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

திடீர் ஆலோசனை

இதனிடையே முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அது முடிந்தபின், முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

எஸ்.ஐ.டி.

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு(எஸ்.ஐ.டி.) அமைக்கப்படும். போலீஸ் ஐ.ஜி. தலைமையில் அந்த விசாரணைக் குழு செயல்படும். சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கூட, எங்கள் அரசு தயாராக இருக்கிறது.

இந்த வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக எடுக்கப்போகிறார்கள். இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ஐ.ஜி.தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு மிகுந்த கவனத்துடன் அணுக  வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.பி. அதிகாரகளுக்கு  ஆணையிட்டு, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கூறியுள்ளேன்.

பாதுகாப்பு

இந்த வழக்கைப் பொருத்தவரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க காலம் நிர்ணயிக்கவில்லை. சிறப்பு விசாரணையை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த கொலைக்கு பின், மாநிலத்தில் சுதந்திர சிந்தனையாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு ஆணையிட்டுள்ளேன்.

கவுரியின் சகோதரர் சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளார். அரசு அவரின் கோரிக்கையை எதிர்க்கவில்லை. முதலில் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கட்டும்.

கண்காணிப்பு கேமிரா

கவுரி கொலையின் போது அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புகேமிராக்களை போலீசார் கைப்பற்றினர். அதில் தாக்குதல் நடத்திய ஒருநபர்ஹெல்மட் அணிந்து வீட்டுக்குள் வந்து 3 அடிதொலைவில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

வேதனை அளிக்கிறது

தீவிர விசாரணை நடத்தி, விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கவுரி என்னை அடிக்கடி வந்து சந்திப்பார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஒரு முறைகூட கூறவில்லை. கடந்தவாரம் கூட என்னைச் சந்தித்தார். அவரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய இழப்பு. அவரின் தந்தை காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் நன்கு பழக்கமானவர்.

ஒருவர் கைது

இதுபோன்ற திட்டமிட்ட கொலையில், உளவுப்பிரிவு போலீசார் செயல்பாடு தவறிவிட்டது என்று கூற முடியாது. இந்த கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்த சிக்மகளூரைச் சேர்ந்த மல்லி அர்ஜூனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

குல்பர்கி கொலை விசாரணை எப்படி?

கவுரியைப் போன்றுஇதேபோல் சுட்டுக் கொல்லப்பட்ட குல்பர்கி கொலையிலும் விசாரணை நடந்து வருகிறது. இரு கொலையிலும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என இப்போதே கூற இயலாது. ஆனால், திட்டமிட்ட படுகொலை என்பது உண்மை. அது குறித்து  போலீசார் விசாரிப்பார்கள்.

குல்பர்கி கொல்லப்பட்ட விஷயத்தில் விசாரணை தாமதமாகிறது. ஆனால், சரியான திசையில் செல்கிறது. மஹாராஷ்டிரா போலீசாருடன் இணைந்து, கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏனென்றால்,மஹாராஷ்டிராவிலும் இதேபோல், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டனர்.

ஆதலால் கல்புர்கி கொலையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விவரங்களை இப்போது வௌியிட முடியாது. இந்த கொலை அனைத்திலும் ஒரேமாதிரியான ஆயுதம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

குற்றவாளிகள் விரைவில் கைதாவார்கள்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் சகோதரர் இந்திரஜித் லங்கேஷ் கூறுகையில், “ வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் அனைத்தும் பதிவாகியிருக்கும். அதனால் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறேன். கவுரியின்செல்போனிலும் ஏராளமான தகவல்களும், விசாரணைக்கு தேவையான விவரங்களும் கிடைக்கலாம். விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இதை ஒப்படைப்பேன். அந்த கண்காணிப்பு காட்சி பதிவான ‘ஹார்டு டிஸ்கை’ என் முன்பும், என் தாய் முன்பும் திறக்க போலீசாரிடம் கேட்டுள்ளேன். இரு கேமிராக்கள்வாசலில்  பொருத்தப்பட்டதால்,  என்ன நடந்தது என்பது துல்லியமாகத் தெரியும்’’ என்றார்

முதல்வர் சித்தராமையாவிடம் ராகுல் பேச்சு

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தார். அது குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், “  கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக முதல்வர் சித்தராமையிடம் பேசினேன். இது மிகவும் முக்கியமான ஒன்று. கொலை குற்றவாளிகள், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்’’ என்றார்.