இந்தி மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து திமுகவின் சார்பில் நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுனருடனான சந்திப்பிற்கு பின்னர் இதை அவர் அறிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார், அழைப்பின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்தார்.பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதன் விவரம் பின்வருமாறு:-

”ஆளுநர் அழைப்பின் பேரில் நானும் முதன்மைச் செயலாளர் டி ஆர் பாலு நேரில் சந்தித்தோம், இந்திமொழி நாட்டின் பொது மொழி, அனைத்து மாநிலத்திற்கும் இந்தி கட்டாயம் என்று அமித்ஷா கூறிய கருத்தை கண்டித்து வருகிற 20ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது, அப் போராட்டம் குறித்து  ஆளுநர் என்னிடம் கேட்டார்.  பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் கருத்து   தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஒருபோதும் இந்தித்திணிப்பு ஏற்படாது என்றும், மேலும் இந்த விவகாரம் குறித்து அமித்ஷா விளக்கம் அளித்து விட்டார் என்று ஆளுநர் தங்களிடம் கூறினார்... இதன் மூலம் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது”, எனவே வருகின்ற 20ஆம் தேதி நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என ஸ்டாலின் அறிவித்தார். 

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, ஒரே மொழி, ஒரே தேசம் என்ற முழக்கத்தை முன்வைத்து  நாடு முழுவதும் இந்தியை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு முழங்கியதுடன். அனைத்து மாநிலத்திற்கும் இனி இந்திமொழி கட்டாயம் என  உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அவரின் அறிவிப்புக்கு இந்தி பேசாத மாநிலத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் போராட்டத்தில் குதித்தனர். அமித்ஷாவின் இந்த அறிவிப்பை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் வரும் 20 ஆம் தேதி பேராட்டம் நடைபெறும்என திமுக அதிரடியாக போராட்டத்தில் இறங்கியது,

இந்நிலையில் தன் கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பதை அறிந்த அமித்ஷா இந்தி மொழி கட்டாயம் என்று தான் கூறவில்லை. தான்பேசியது  தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என ஜகா வாங்கினார். இந்நிலையில்  திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து  போராட்டத்தை கைவிடுமாறு ஆளுனர் வலியுறுத்தியதின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.