ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. இல்லன்னா வெளியேற வைப்போம்.. எஸ்டிபிஐ எச்சரிக்கை.
தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேற வேண்டும், இல்லை என்றால் அவர் வெளியேறும்படி எங்களது அடுத்தகட்ட போராட்டம் இருக்கும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேற வேண்டும், இல்லை என்றால் அவர் வெளியேறும்படி எங்களது அடுத்தகட்ட போராட்டம் இருக்கும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு ஆளுனர் வீண் என அண்ணா கூறியது போல ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநர் வேலையைச் செய்யாமல் ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படுகிறார் என கூறி உடனே மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியினர் சென்னையில் பேரணி நடத்தினர். சென்னை கிண்டியில் தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு சிறுபான்மை விரோத போக்கு, 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது உள்ளிட்டவைகளை கண்டித்து எஸ்டிபிஐ இன்னும் சில கட்சிகள் இணைந்து ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போராட்டத்தின் போது ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்ந்து சட்டமன்றத்தின் இறையாண்மையை மதிக்காமல் நாகலாந்து மக்களைப்போல தமிழக மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். சிறுபான்மையினர் விரோதப் போக்கு மாநில சுயாட்சி எதிர்ப்பு போன்ற சித்தாந்தங்களுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
7 தமிழர் விடுதலை உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு கையொப்பம் இடாமல் காலம் தாழ்த்தி வருவது உள்ளிட்டவைகளை கண்டித்து பேரணி நடத்தினோம், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு ஆளுநர் வீண் என பேரறிஞர் அண்ணா கூறியது போல தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் தமிழக ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும, இல்லாவிட்டால் அவர் வெளியேறும்படி எங்களது அடுத்த கட்ட போராட்டங்கள் இருக்கும் என அவர் எச்சரித்தார்.