பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இன்று வேதாரணியத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின்  தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்து வந்தார். 

பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து இருப்பதாக காரணம் கூறப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்றம் இது பற்றி கூறுகையில், அந்த அறிக்கை தேவையில்லை என்றும், இன்னும் ஏன் இவர்களின் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுக்கவில்லை ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே,உச்ச நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில்  பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள், அரசு சார்பில் அமைச்சர்களை கவர்னரிடம் அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏற்கனவே 29 ஆண்டுகள் அவர்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள். மரியாதைக்குரிய சோனியா அம்மையாரும், ராகுல் காந்தியும் அவர்களை மன்னித்ததுடன் பழிவாங்கும் எண்ணமில்லை என்றும் கூறி விட்டனர். எனவே கவர்னர் இனியும் இவர்களின் விடுதலையை தாமதிக்க கூடாது. கவர்னர் இதை அலட்சியப்படுத்தினால், "கவர்னரே வெளியேறு" என்ற போராட்டத்தை ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம். அது போல் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை  வருடத்தை நிர்ணயம் செய்து , அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.