Asianet News TamilAsianet News Tamil

ஆளுனர் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறார்..!! இட ஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் ராமதாஸ் கர்ஜனை..!!

ஆளுனர் என்ற ஒற்றை மனிதரின் விருப்பு, வெறுப்புக்காக 400 ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு கருகுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஆளுனருக்கு  உரிய அழுத்தம் கொடுத்து 7.5% இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதலைப் பெற வேண்டும்.

Governor is against social justice,  Ramadan roar again on reservation issue
Author
Chennai, First Published Oct 14, 2020, 1:51 PM IST

அரசு பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளன. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதே நாளில் ஆளுனரின் ஒப்புதலுக்காக ஆளுனர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுனர் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவ்வாறு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கான எந்த காரணத்தையும் ஆளுனர் மாளிகை தெரிவிக்கவில்லை. 

Governor is against social justice,  Ramadan roar again on reservation issue

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுனரின் கடமை ஆகும். எந்த சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க முடியாது என்று ஆளுனர் மறுக்க முடியாது. அதிகபட்சமாக சட்டத்தில் ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அது குறித்து விளக்கம் அளிக்கும்படி மாநில அரசை கோரலாம். மாநில அரசின் விளக்கத்தை ஏற்று சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; அல்லது சட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பிய சட்டத்தை அரசு மீண்டும் ஆளுனருக்கு அனுப்பி வைத்தால் அவர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது தான் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதியாகும். இதன்படி நடப்பதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லை. ஆனால், 7.5% உள் ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் இவற்றில் எந்த நடைமுறையையும் ஆளுனர் பின்பற்றவில்லை.  மாறாக, பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத்தை இதுவரை ஆய்வுக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் ஆளுனர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.  

Governor is against social justice,  Ramadan roar again on reservation issue

ஒரு சட்டத்திற்கு ஒப்புதலும் அளிக்காமல், திருப்பியும் அனுப்பாமல் வைத்திருக்கலாம் என்ற ஒற்றை அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கக் கூடிய சட்டத்திற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு  ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் ஆளுனர் தொடக்கம் முதலே எதிர்மறையாகத் தான் செயல்பட்டு வருகிறார். இதே விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கும்படி இரு முறை அமைச்சரவை பரிந்துரைத்தும்  அதை ஆளுனர் ஏற்கவில்லை. பின்னர் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அனுப்பிய பிறகு கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆளுனரை சந்தித்து இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் 10 நாட்களாகியும் ஆளுனரிடமிருந்து பதில் இல்லை. 

Governor is against social justice,  Ramadan roar again on reservation issue

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், நடப்பாண்டில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில்  இடம் கிடைக்கும். இது சாதாரண விஷயமல்ல. கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 3 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்த நிலையில், இப்போது அதை விட 100 மடங்குக்கும் கூடுதலான மாணவர்களுக்கு கிடைக்க வகை செய்யும் இந்த சட்டம் வரப்பிரசாதம் ஆகும். இதற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடுகிறார் என்றால் அவர் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்; ஏழை மாணவர்கள் முன்னேற்றத்தை வெறுக்கிறார் என்று தான் பொருள் ஆகும். கொரோனா ஊரடங்கு மட்டும் இல்லை என்றால், 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதைக்  ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆளுனர் மாளிகை முன் மாபெரும் போராட்டம் நடத்தியிருப்பேன். 

Governor is against social justice,  Ramadan roar again on reservation issue

7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையாக இருந்தாலும், 7.5% இட ஒதுக்கீட்டு சட்டமாக இருந்தாலும்  தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், உணர்வுக்கும் எதிராக ஆளுனர் செயல்படுவது முறையல்ல. இது  தமிழ்நாட்டு சட்டப்பேரவையையும், அந்த அவைக்கு உறுப்பினர்களை அனுப்பிய 7 கோடி தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகும். ஆளுனர் என்ற ஒற்றை மனிதரின் விருப்பு, வெறுப்புக்காக 400 ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு கருகுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஆளுனருக்கு  உரிய அழுத்தம் கொடுத்து 7.5% இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக முதல்வரும், அமைச்சர்களும் ஆளுனரை மீண்டும் ஒருமுறை சந்தித்து வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டால் ஆளுனரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

Governor is against social justice,  Ramadan roar again on reservation issue

நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதற்குள் ஆளுனர்  இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதை எளிதாக எடுத்துக் கொண்டு, நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படாது; அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமானால் அது சமூகநீதிக்கும், ஏழை மாணவர்களுக்கும்  இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும். எனவே, எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுனருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5% இட ஒதுக்கீட்டுக்கு  ஒப்புதல் பெற வேண்டும்; அதன்பிறகு தான் மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios