Explainer: அடுத்தடுத்த அழுத்தம்.. ஒருவழியாக ஒப்புதல் கொடுத்த ஆளுநர்..சாதித்த முதல்வர் - என்ன தான் நடந்தது.?
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு கொடுத்த அழுத்தம் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நவம்பரில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.அந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தீர்ப்பளித்தது. அதனையடுத்து, மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 19-ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் டிசம்பர் மாதம் காலாவதியானது. இதற்கிடையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்தன. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் திரும்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்ட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்தநிலையில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்மைச்சர் மு.க ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் 144 வாக்குகளுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநருக்கு அரசாங்கம் மூன்று தலைப்புகளில் நிதி ஒதுக்குகிறது. ரூ. 2.41 கோடியாக இருந்த ராஜ்பவனுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ. 2.86 கோடியாக அதிகரித்து, இந்த ஆண்டு ரூ. 3.63 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி வீட்டுச் செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ. 11.60 கோடியிலிருந்து கடந்த ஆண்டு ரூ. 15.93 கோடியாக அதிகரித்து, இந்த ஆண்டு ரூ. 16.69 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப நிதி ஏழை, எளிய மக்களின் பெரிய மருத்துவ தேவைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
ஏழைப் பெற்றோரின் மகள் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிகளில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகையில் மொத்தமாக 1ரூ. 8.38 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ. 11.32 கோடி அவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டு, எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் அரசுக்கு தெரியவில்லை. இது விதிமீறல். எல்லா மாநிலங்களிலும் விருப்ப நிதி குறைவாகவே வழங்கப்படுகிறது, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கத்தில் தலா ரூ. 25 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் நிதி கொடுக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் அதுவும் மீறப்பட்டு ஒரு நபருக்கு மாதாமாதம் ரூ.58000 வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பணியாளர்களுக்கும் போனஸ் என்று ஒரு முறை ரூ. 18 லட்சம் மற்றும் இன்னொரு முறை ரூ. 14 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிதி வரைமுறைகளை மீறி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது வருத்தமான விஷயம். இதனை உடனடியாக தடுக்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என்று பேசினார்.
தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசிய போது, " ஆளுநர் அவர்கள், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும், சுயாட்சிக் கொண்டவையாய் மாநிலங்களை மலர வைக்கவும், திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப் படையாகச் செயல்படும் என்று தலைநகர் டெல்லியில் வைத்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை இம்மாமன்றத்தில் நானும் வழிமொழிகிறேன்.
இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதனை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது. ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய போதிலும், அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்த போதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை.
வரலாற்றுச் சிறப்புமிக்க இதே மாமன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு, மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது வரலாறு. குடியரசுத் தலைவரைப் பதவி நீக்க "இம்பீச்மென்ட்" அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பது போல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கும் "இம்பீச்மென்ட்" அதிகாரம் வழங்கலாமா என ஒரு கலந்தாலோசனையையே (Consultation Paper) அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராகச் செயல்பட வேண்டும்" என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்" என்று எத்தனையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நமது ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் "நண்பராக" இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது" என்று பேசினார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்த தீர்மானத்தை சரியான நேரத்தில் நமது முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அந்தத் தீர்மானத்தில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் நாகரீகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
ஒரு கனத்த இதயத்தோடுத்தான் இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்திருப்பார். சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான் (அ.தி.மு.க.,வினர்). ஆளுநர் பதவி தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றியபோதே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வருவோமோ என்று தெரியாதபோதே கவர்னர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி தி.மு.க. அரசியல் நிர்ணய சபையில் பேசியவர்கள் கூட ஆளுநர் தேவையில்லை என்றுதான் சிலர் சொன்னார்கள். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசை ஆட்டிப்படைக்கவும், 365 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்க தங்களுக்கு ஒரு ஏஜெண்டு வேண்டும் என்றும் ஆளுநர் பதவியை உருவாக்கினார்கள்.
பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆளுநர்கள்தான். முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்தது கேரளாவில் நம்பூதிரிபாட் ஆட்சியைத்தான். மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகராறு காரணமாக சபாஷ் கொட்டி அவரை ராஜ்யசபா தலைவராக்கி உள்ளார்கள். அதை பார்த்துதான் நமது ஆளுநருக்கு ஒரு நப்பாசை. ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன், பேசி உள்ளோம். ஆனால் பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை.
இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது என்பது நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம் என கவர்னர் பெருமையாக கூறி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள் கவர்னராக மட்டும் அல்ல, இந்திய குடிமகனாகவே இருக்க தகுதியற்றவர்கள். உங்களுக்கு ஒரு கட்சிக் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு போங்கள்” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!