கையில் துப்பாக்கி, போலீஸ் கார், காக்கி உடை என கம்பீரமாக உலாவந்து..மதுரையில் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகளின் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 40 லட்சம் ரூபாயை சுருட்டிய கணவன் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கு மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த சக்திவேல் பாண்டியராஜன் என்பவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்வதாகவும் , எனது மனைவி காமேஸ்வரி மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும்  கூறி தன்னிடம் ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு 5 லட்சம் கொடுத்தால் காவல் ஆணையர் அலுவலகத்திலோ, கோவிலிலோ, மின்சார வாரியத்திலோ வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டார்.  10 மாதங்கள் கடந்த நிலையில் வேலை வாங்கி தர வில்லை தன்னை போல 10க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் பல லட்சங்கள் கொடுத்திருந்த நிலையில் அவரை வீட்டில் சந்தித்து கேட்ட பிறகு  போலியான அரசு முத்திரை பதித்த உத்தரவு நகல்களை கொடுத்து மேலும் பணம் கேட்ட நிலையில் சந்தேகமடைந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரித்த போது அப்படியொரு நபர் இங்கு இல்லை என்று தெரிந்ததும் எனக்கு தூக்கி வாரி போட்டது. பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி எங்களிடம் ஏமாற்றியிருக்கிறார் என்று தெரிந்தது. எங்களை நம்ப வைத்து ஏமாற்றி 40 லட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்றுக் கொண்டு தற்போது தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 10 பேர் வரை சக்திவேல் பாண்டியராஜன் மேல் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பதாகவும், எங்களை போல பல பேர் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் பல கோடிகளை அவர் வசூல் செய்திருப்பார் என தெரிவித்தார் காளிதாஸ்.

மேலும் தங்களை ஏமாற்ற காவல் என எழுதிய காரிலும், காவல் உடையிலும், துப்பாக்கியுடனும் காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக தங்களை அழைத்தும் பேசி ஏமாற்றியதாகவும் புகார் அளித்திருக்கிறார். .காவல் ஆணையர் அலுவலகம் முன்பு காக்கி உடை போலீஸ் கார் என வலம் வந்த சக்திவேல்பாண்டியன் பின்னால் மறைந்திருக்கும் திரையை விலக்கி பார்த்தால் இன்னும் நிறைய பேர் மாட்டுவார்கள் என்கிறது காக்கி வட்டாரம்.