Asianet News TamilAsianet News Tamil

பயணிகளிடம் அதிக கட்டணம் வாங்காதீங்க.. தனியார் பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை!!

government warns private buses
government warns private buses
Author
First Published Jan 5, 2018, 2:14 PM IST


போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இதைப்பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு எச்சரித்துள்ளது.

13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், வேலைநிறுத்தம் தொடர்ந்து வருவதால் மக்களும் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மிகக்குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

தொமுச., சிஐடியு உட்பட 10 தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை மட்டும் வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதற்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அதனால், சென்னையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களுக்கு போக்குவரத்து சேவையை உறுதி செய்யும் பொருட்டு, சென்னை கோயம்பேட்டிலிருந்து அம்பத்தூர், ஆவடி, கிண்டி போன்ற பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகளின் தவிப்பு ஓரளவு குறைந்துள்ளது. 

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios