government school teachers join their child in government school
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 128வது பிறந்ததினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் மேல் அதிக ஈடுபாடு கொண்ட நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் பாரதி பூங்கா எதிரில் உள்ள நேரு சிலைக்கு இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார்.
அப்போது பேசிய அவர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரியும். இனிவரும் காலங்களில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த வகையிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுவருகிறது. அதேபோல, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வியுடன் அனுபவமும் சேர்ந்தே வளரும் என்று பேசினார்.
