அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களைப் போல சிறப்பான தனியார் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வசதி வாய்ப்புகள் இல்லை, ஆகவே அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு அவசியம், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்தப் பிரிவினரும் பாதிக்கப்படுவதில்லை, குறிப்பாக பொதுப்பிரிவில் 33 சதவீத இட ஒதுக்கீடு இதனால் பாதிக்கப் படாது.

நீட் தேர்வால் இனி அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவர்களாகலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மருத்துவ கல்விக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோரை வணங்கி வாழ்த்தி நன்றி பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்த தீர்ப்பினை வரவேற்கிறோம்.தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் மற்றும் ஒருசில அரசியல் கட்சியினரை தவிர மருத்துவக் கல்வியில் சேர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு எளிய மக்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாக கருதி அனைத்து மாநில மக்களும் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வை பாராட்டி வரவேற்றுள்ளனர்.

இந்தச் சூழலில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலைராஜன் அவர்கள் தலைமையிலான குழு அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை ஆய்வு செய்து அளித்த பரிந்துரையை ஏற்று முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்று இந்த சிறப்பான உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்களும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களும், இதே போல சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்க கோரி மனு செய்தனர். இலவச சீருடைகள் இலவச பாடப்புத்தகங்கள் என்று அரசின் பிற சலுகைகள் தங்களுக்கு கிடைப்பதாகவும் அதுபோல இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களைப் போல சிறப்பான தனியார் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வசதி வாய்ப்புகள் இல்லை, ஆகவே அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு அவசியம், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்தப் பிரிவினரும் பாதிக்கப்படுவதில்லை, குறிப்பாக பொதுப்பிரிவில் 33 சதவீத இட ஒதுக்கீடு இதனால் பாதிக்கப் படாது. 69 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று மாண்புமிகு நீதியரசரிடம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை கேட்ட பின் நீதிபதிகள் இடையே குறுக்கீட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி இருந்தால் நீட் பயிற்சி மையங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்காது என தெரிவித்தனர். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டை, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாங்கள் பெரிதும் நன்றி பாராட்டி வரவேற்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.