கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது  குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு: 

ஜல்லிக்கட்டு விளையாட்டில் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் இருந்து அதன் வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டுமல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தற்போது covid-19 பெருந்தொற்று காரணமாக எதிர்வரும் 2021ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது:  ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. 

எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்தவெளியில் அளவிற்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை thermal scanning செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.