Government mandate after the murder of 13 people? TTV Dinakaran

தூத்துக்குடி கலவரத்தில் 13 பேர் படுகொலை செய்யப்பட்ட பிறகே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசாணை போடப்பட்டது என்றும், கண்கெட்டபிறகே சூரிய
நமஸ்காரம் செய்யப்பட்டதாகவும் அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, 13 பேர் படுகொலை செய்யப்பட்ட பிறகே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு அரசாணை போட்டுள்ளது என்றார். 

நூறு நாட்களாக போராட்டம் நடைபெற்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களோ, மாவட்ட நிர்வாகமோ போராட்டக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார். தூத்துக்குடியில் உள்ள மக்களுக்கு கேன்சர் போன்ற கொடிய நோய்கள் எல்லாம் வருவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. 

போராட்டக்காரர்களை முதலமைச்சர் அழைத்துப் பேசியிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த பிறகு இவர்கள் ஆலைக்கு எதிராக ஆணை போட்டுள்ளனர். அரசாணை முன்பே போட்டிருந்தால இந்த படுகொலை நடந்திருக்காது. திரும்பவும் பிடிவாதமாக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழகத்தில் தாமிர ஆலையே வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன தயக்கம். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைய செய்து விட்டதாக கூறி வருகிறார். இதுநாள் வரை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். தூத்துக்குடி மக்களை
யாரும் பார்க்கவில்லை. அங்கு தெருத்தெருவாக சென்று பொதுமக்களை சந்தித்தேன். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன். அவர்கள் துவிரவாதிகள் அல்ல. தன்னெழுச்சியாகவே இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகன், மகள், சகோதரர்களை இழந்தவர்கள் என அனைவரும்
அச்சத்தில் உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. ஆலையை மூடவில்லை என்றால் எங்களை சுடுங்கள்
என்கிறார்கள் அவர்கள். கையாலாகாத அரசு என்று கூறுவது ஏன்? நூறு நாட்களாக நடைபெறும் போராட்டத்தில் அரசு கண்டு கொள்ளாதது ஏன்?
இவ்வாறு தினகரன் பேசினார்.