Government Assistance can be obtained only if the AIADMK card is available

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும் என பட்டவர்த்தனமாக தெரிவித்துக் கொள்வதாக உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழக அமைச்சர்களில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் அவரின் திட்டங்களும் அகில உலக ஃபேமஸ் ஆனவை. வைகை அணையை தெர்மக்கோல் போட்டு அவர் மூடிய காட்சிகளை சீன நாட்டுப் பத்திரிகைகள்கூட புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன.

அதுமட்டுமல்லாமல், அடிக்கடி அரிய கருத்துகளைக் கூறி மக்களை சிந்திக்கவைப்பதோடு, சிரிக்கவும் வைப்பார். இதனால் எடப்பாடி தரப்பு ஒன்றும் கூற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. 

ஏற்கனவே செல்லூர் ராஜு டிடிவி அணியின் ஸ்லீப்பர் செல் என அனைவராலும் சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில் தாம் கோபப்பட்டால் அது உண்மையாகி விடுமோ என்ற தயக்கத்தில் இருக்கிறார்கள் போலும். 

இந்நிலையில் செல்லூர் ராஜு அரசு நிகழ்ச்சை ஒன்றில் மேலும் ஒரு சர்ச்சை பேச்சை அவிழ்த்து விட்டுள்ளார். 

அதாவது மதுரை மாவட்ட அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக்கொண்டார். அப்போது, பேசிய அவர், அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும் என தெரிவித்தார். 

எந்த தேர்தலை கண்டும் அதிமுக பயப்படாது எனவும், தங்களுக்கென தனி கொள்கை உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்களுடன் இணக்கமாக இருந்ததாகவும் அவர்களுடன் மற்ற நடிகர்களை ஒப்பிட முடியாது எனவும் தெரிவித்தார்.