government accepted the transport association condition

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் நடத்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் நிபந்தனையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றுக்கொண்டால், பணிக்கு திரும்ப தயார் என தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளன.

அந்த மனுவில், அரசு வழங்கிய 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கூறுவதற்கும் இடையேயான 0.13 மடங்கு வித்தியாசம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக, அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தொமுச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் நிபந்தனையை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலைநிறுத்தம் விரைவில் முடித்துக்கொள்ளப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் முடிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.