தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில், கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக அதிர்ச்சி , ஊழல் குற்றச்சாட்டை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அண்மையில் தெரிவித்தது தமிழகத்தில் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், உயர்கல்வி ஊழல் பிரச்னை, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'பணம் வாங்கியது யார்; பணம் கொடுத்த துணைவேந்தர்கள் யார்; அவர்களை நியமனம் செய்ய, அனுமதி வழங்கியது யார்?' என, பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, கவர்னரே நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல, உயர் கல்வித்துறை ஊழல் குறித்து, அரசு அமைதியாக இருக்கும் பட்சத்தில், உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவர்னரின் இந்த குற்றச்சாட்டு அதிமுக தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் இதில் பங்கு பிரித்துக் கொண்ட  அமைச்சர்கள், அதிகாரிகள்,  துணை வேந்தர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கவர்னர் இப்படி ஓபனாக பேசியிருப்பதால் நிச்சயம் விசாரணை இருக்கும் என அவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் , முட்டை ஊழல், சத்துணவுப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, மின்சாரம் வாங்கியதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் கொடுத்த பட்டியலை விசாரிக்கச் சொல்லி சரிபார்த்த பின்னர்தான்  ஆளுநர் ஓபன் டாக் விட்டுள்ளார் என்கிறது ஆளுநர் மாளிகை வட்டாரம்.

இதையடுத்து அந்தப்பட்டியலில் உள்ள ஊழல்களை ஆளுநரே வெளியிட்டு விசாரணைக்கு உத்தரவிடுவார் என கூறப்படுகிறது. இதற்கு பாஜக மேலிடமும் அனுமதி கொடுத்துவிட்டது. இதனால் தமிழகத்தில் ஆளும் அரசாங்கம் அரண்டு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.