தமிழகத்தில் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசகர் ராவ் இன்று மும்பை புறப்பட்டு செல்கிறார். அங்கு நான்கைந்து நாட்கள் தனது பணியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்னும் நிரந்தர ஆளுநர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார். இதனால், மும்பைக்கும், சென்னைக்கும் அவர் சென்று வந்து கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், தொடர்ந்து ராஜ் பவனிலேயே தங்கியுள்ளார். அவரை, துரைமுருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களும் சென்று சந்தித்து, தமிழக அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், உடனே முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை மெஜாரிட்டியை நிரூபிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதே கோரிக்கையுடன் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

இந்த நிலையில், இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து மும்பை செல்கிறார். காலை 11.20 மணி விமானத்தில் மும்பை செல்லும் அவர், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து, அங்குள்ள பணிகளை கவனிப்பார் எனவும் 5 நாட்களுக்கும் பின் மீண்டும் சென்னை திரும்புவார் என  தெரிகிறது. 

மும்பையில் தங்கியிருக்கும் அவர், தமிழக அரசியல் நிலை குறித்து மத்திய அரசுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது