பத்திரிக்ககையாளர் சந்திப்பின்போது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியதால் ஏற்பட்டுளள சர்ச்சைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது.

அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து இருந்தது. உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேரம் பேசியது தெரியவந்தது. 

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமனம் செய்யப்பட்டார். 

இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் கிண்டி ராஜ் பவனில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது  நிர்மலா தேவியை நான் பார்த்ததேயில்லை. அவர் யார் என்பதே எனக்குத் தெரியாது. என்னைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். என்னைக் கேட்கமால் காகா குருவி கூட என்னைப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின், பல்வேறு கேள்விகளை  எழுப்பிய பெண் பத்திரிக்கையாளரை  லட்சுமி சுப்ரமணியன் என்பவரை பாராட்டும் விதமாக அவரது கன்னத்தில் ஆளுநர் செல்லமாக தடவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கவர்னரின் இந்த செயலுக்கு பெண் நிருபரும் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது அனுமதியில்லாமல் அதிகார தோரணையில் என் கன்னத்தை கவர்னர் தொட்டது பெரிய தவறு என்றும், அவர் தொட்ட இடத்தை பல முறை கழுவியும் அந்த கறை போகவில்லை எனவும் கடுமை காட்டியிருந்தார்.

இந்நிலையில் கவர்னர் அந்த பெண் நிருபரிடம் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களை பேத்தி போன்று நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அவரது சிறப்பான  கேள்விகளை பாராட்டும் விதமாக அப்படி செய்ததாகவும் குறிபிட்டுள்ளார். இந்த செயலுக்காக தான் மன்னிப்புக்  கேட்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.