எம்.ஜி.ஆர். காலத்தில் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய புள்ளியாய் விளங்கியவர்கள், கட்சி அப்படியே ஜெயலலிதாவின் கைகளுக்குள் வந்ததும் அவரது படைத்தளபதிகளாகி போயினர். அவர்களுள் ஒருவர்தான் நெல்லை கருப்பசாமி பாண்டியன். காட்டிய விசுவாசத்துக்காக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார் கானா. 

ஆனால் நிர்வாகிகள் நியமனத்தில் இவரது செயல்பாடுகளில் லேசாக பிசிறடித்தது. இதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், தி.மு.க.வில் ஐக்கியமானார். அங்கே எம்.எல்.ஏ. பதவியையெல்லாம் அலங்கரித்துவிட்டு, ஒரு எசகுபிசகு புகாரினால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெ., மறைவுக்குப் பின் தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் இங்கேயோ அதைவிட மிக மோசமான முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். 

இப்படி அங்கிட்டும் இங்கிட்டுமாக இவர் சர்வீஸ் நடத்திக் கொண்டிருப்பது, நெல்லை ஏரியாவில் கானாவின் மரியாதையை துவைத்துக் காயப்போட்டுள்ளது தாமிரபரணியாற்றில். ஆனால் அ.தி.மு.க.வில் இணைந்த கையோடு அம்பாசமுத்திரத்தில் நடந்த வீரவணக்க நாள் கூட்டத்தில் அவர் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் மரியாதைகளை அலசி எடுத்துக் கும்மியதுதான் பெரிய பரபரப்பு. அம்பாசமுத்திரம் கூட்டத்தில் மைக் பிடித்த கானா “தான் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டை ஆஸ்பத்திரிக்கு கொடுத்திடுவேன்னு கருணாநிதி சொன்னார்!? சொன்னாரா....சரி எப்போ அதை கொடுப்பீக? உங்களுக்குதான் வழி வழியா பாட்டன், பூட்டன், ஓட்டன்னு நூத்தைம்பது வாரிசுகள் இருக்குறாகளே. 

எப்படி கொடுப்பீங்க? இந்த தமிழ்நாட்டுல தலைவர் எம்.ஜி.ஆர். மூணு தடவை, அம்மா ஆறு தடவை முதல்வராகியிருக்காங்க. அ.தி.மு.க.வின் ஆட்சி என்றால் அது மக்களின் ஆட்சி. ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலோ அது அவரது குடும்பத்துக்கான ஆட்சிதான். அவரும் ஸ்டாலினும் சென்னையை பார்த்துக்குவாங்க. கொங்கு மண்டலத்தை செல்வி பார்த்துக்குவாங்க, மதுரைக்கு தெற்கே அழகிரிக்கு பட்டா. என்ன பாவம் பண்ணினேனோ அந்த கட்சியிலெல்லாம் நான் மாவட்ட செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து தொலைச்சுட்டேன். 

என்னை கலைஞர் கூப்பிட்டாருன்னு போனேன். அவருக்கு அப்புறம் அந்த தி.மு.க. கட்சி கார்ப்பரேட் கம்பெனியாகிடுச்சு. அறிவாலயத்திலும், தலைவர் வீட்டிலும் பணம் பணம்னு அலையுறாங்க!ன்னு பழ.கருப்பையா நொந்து போய் சொல்லியிருக்கார். அதுதான் உண்மை. இந்தியாவிலேயே 50 பணக்கார குடும்பங்களில் மாறன் குடும்பமும் ஒன்றுன்னு ஆங்கில பத்திரிக்கை ஒண்ணு சொல்லுது. இந்தியா முழுக்க ஏரோபிளேன் சர்வீஸ் விட்டிருக்காங்க. எப்படி இவ்வளவு பணம்? திருவாரூர்ல இருந்து சென்னைக்கு வரும்போது ஜெட்  ஏரோபிளேன்லேயா வந்தீங்க? அது ஓ.சி டிரெயினோ இல்ல கள்ள டிரெயினோ எனக்குத் தெரியாது.” என்று ஆவேசமாய் பேசியிருக்கிறார் கானா. கருப்பசாமி பாண்டியன் இந்த வம்பு பேச்சை, ஸ்டாலினை ஸ்டிரெய்ட்டாக அவர் வம்புக்கு இழுத்த ஒன்றாகவே நினைத்து செம்ம காண்டில் கொதிக்க துவங்கியுள்ளனர் நெல்லை மாவட்ட தி.மு.க.வினர்.