சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட டிரஸ்ட்புரம் பகுதி, வன்னியர் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர்  காமராஜ் ஆய்வு செய்தார். நாடகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு மேற்கொண்ட கிராமிய கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர்,பொதுமக்களுக்கு சத்து மாத்திரை, கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,தமிழகத்தில் கொரோனா தொற்றின் வீரியம் படிப்படியாக  குறைந்து வருவதாகவும், உலகளவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 61 சதவீதமாகவும்,
இந்தியாவில்  63.91 சதவீதமாகவும் உள்ளது என்றார். 

அதில் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை  73.13 சதவீதமாகவும், சென்னையில் 83 சதவீதமாகவும் உள்ளது என கூறினார். சென்னை மாநகராட்சியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் காய்ச்சல் முகாம்கள், மைக்ரோ லெவெல் கண்காணிப்பு பணிகள் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்த அவர், தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் இதுவரை 2,164 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 1,40,000 பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்தார். மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், ஆடி மாத வழிபாட்டின் போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், தொற்று வந்தாலும், மீண்டு விடலாம் என்ற நமபிக்கையோடு மக்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தார். 

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டம் முதல்வரால் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஆகஸ்ட் மாத பொருட்களை வாங்கி கொள்வதற்காக, வரும் 1,3,4 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும், 5ம்தேதி முதல் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை  ரேஷன் கடைகளுக்கு சென்று  வாங்கிக் கொள்ளலாம் எனவும், கடைகளில்  ஒரு நபருக்கு இரண்டு முகக்கவசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். ஊரடங்கு நீட்டிப்பது  குறித்து மருத்துவ குழு அறிக்கை அடிப்படையில் முதல்வர் முடிவெடுப்பார் என காமராஜ் தெரிவித்தார்.