மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்;- ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். முதல்வர் பழனிசாமி ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த நல்லாட்சியின் பயனாக எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள், மக்கள் மகிழும் அளவிற்கு மழை பெய்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி உள்ளது. மேலும், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே மோதலா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பது மட்டும் தான் என் கருத்து என்று தெரிவித்தார். 

இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் தனது ஆதரவு என்றும், அவர் தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்பது போல் செங்கோட்டையன் பேச்சு உள்ளது குறிப்பிடத்தக்கது.