தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிரான, #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டின் இறுதியிலேயே மக்களவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

அதை உறுதிப்படுத்தும் விதமாகவே பாஜகவின் தீவிரமான செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மக்களவை தேர்தலுக்கான பணியை பாஜக இப்போதே தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக மாநில பாஜக நிர்வாகிகளுடன் விவாதிப்பதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பயணம் மேற்கொண்டுவருகிறார். 

அந்த வகையில் தமிழகத்திற்கு இன்று வருகிறார். அவர் தமிழகத்திற்கு வரும் முன்னரே மக்களவை தேர்தலுக்கான களப்பணிகளை ஆற்ற பாஜக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தமிழகத்தில் 5 வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரு சக்தி கேந்திரமாகவும், 6 சக்தி கேந்திரங்களை இணைத்து ஒரு மகா கேந்திரமாகவும் அமைத்து அதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னை வரும் அமித் ஷா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என  10ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடன் அமித்ஷா கலந்துரையாட உள்ளார். 

அமித் ஷா சென்னை வருவதற்கு முன்பாகவே, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 15 ஆயிரத்திற்கும் அதிகமான டுவீட்டுகளும் ரீடுவீட்டுகளும் செய்யப்பட்டுள்ளன. 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.