Goa Chief Minister Manohar Parrikar assumes tomorrow

கோவாவின் புதிய முதல் அமைச்சராக மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் இன்று பொறுப்பு ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தல் முடிவுகள்

கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 4-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. பலம் வாய்ந்த சிறு கட்சிகளும் களத்தில் நின்றதால் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் 17 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

பெரும்பான்மை இல்லை

பாஜகவுக்கு 13 இடங்கள் கிடைத்தன. மற்ற 10 இடங்களை உதிரிக் கட்சிகள் கைப்பற்றி பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தின. கோவா முன்னணி, மகாராஷ்டிரவதி கோமந்தக் ஆகிய கட்சிகள் தலா 3 இடங்களில் வென்றன. சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்று அதிர்வலைகளை உண்டாக்கினர். தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு ஒரு இடம் கூட கோவாவில் கிடைக்கவில்லை.

அமைச்சர்கள் தோல்வி

குறிப்பிடும் வகையில் தேர்தலில் போட்டியிட்ட கோவா முதல் அமைச்சர் லட்சுமி காந்த் பர்சேகர் மண்ட்ரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அவருடன் சேர்த்து 8 அமைச்சர்களில் 6 பேர் தோல்வியை தழுவினர். இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது உறுதியானது.

மேலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே மீண்டும் போட்டி ஏற்பட்டது.

அதிரடி நடவடிக்கை

இருப்பினும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்பதாலும், பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 4 இடங்கள் போதுமானது என்பதாலும் காங்கிரஸ் கட்சியே கோவாவில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜக தலைவர்கள் உதிரி கட்சிகள் மற்றும் சுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டினர்.

இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுபட்டு மாநில அரசியலுக்கும் மனோகர் பாரிக்கர் திரும்ப வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

திடீர் திருப்பம்

இதேபோன்று, பாரிக்கர் தலைமை பொறுப்பை ஏற்றால் அவரை ஆதரிப்போம் என மற்ற கட்சிகள் அறிவித்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீர் திருப்பமாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது கட்சியின் 13 எம்எல்ஏக்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவிர்த்து மீதம் உள்ள 9 எம்எல்ஏக்கள் ஆகியோருடன் கவர்னர் மிருதுளா சின்ஹாவை இரவு 7.30-க்கு சந்தித்தார். அப்போது பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். மாநில அரசியலில் நுழைவதற்கு மனோகர் பாரிக்கருக்கு பாஜக தலைமை அனுமதி அளித்தது.

மோடி பங்கேற்க வாய்ப்பு

அதன் தொடர்ச்சியாக நேற்று அவர் தனது மத்திய பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவர் மாநில அமைச்சராக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக ‘தளபதி’

61 வயதாகும் மனோகர் பாரிக்கர் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) பட்டம் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த அவருக்கு பாஜகவில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த 2000-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து மாநில முதல் அமைச்சராக பாரிக்கர் பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் 2012-ல் பாஜக ஆட்சி அமைந்தபோதும் அவருக்கு முதல் அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

2014-மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு பாரிக்கருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் மாநில அரசியலுக்கு திரும்பி கோவா முதல் அமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ளார்.