எந்த நிறுவனமும் முன் வரவில்லை.. மீண்டும் உலகளாவிய டெண்டர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். இதனையடுத்து, உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்றிந்தனர். பின்னர், உதகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்;- தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு உலகளவில் டெண்டர் கோரிய நிலையில் டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இது போன்று எந்த நிறுவனங்களும் டெண்டரை பெற முன்வராததற்கு மத்திய அரசுதான் காரணம் என கூறுவது அபத்தமாக இருக்கும். எந்த காணத்தினால் டெண்டர் எடுக்கவில்லை என்று ஆய்வு செய்து மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்படும்.
விரைவில் தமிழகத்திலேயே தடுப்பூசிக்கான உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட பணியிடங்கள் நிரப்பப்பட்டு பெருந்தொற்று காலத்தில் சிகிச்சைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள் அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளின்படி செயல்படுகிறதா என நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீறி செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.