தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியால் விலகி வந்து தமாகாவை ஆரம்பித்த  ஜி.கே.மூப்பனார். அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் சவாரி போகும் படத்தை  அக்கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுக்க விரும்பினார். கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தை பயன்படுத்தியது.  நடிகர் ரஜினியின் ஆதரவு, சைக்கிள் சின்னத்திற்கு கிடைத்ததால், அந்த தேர்தலில்,  த.மா.கா., பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தஞ்சை தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது. தஞ்சை மக்களவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர். நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கட்சிக்கு தேர்தல் சின்னமாக மிதிவண்டியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தப்பட்டது.

 

இதனை ஏற்று, தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒதுக்கியுள்ளார். இந்நிலையில் தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்துள்ளார். 

இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என்றனர்.