நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். 

நீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது. 

இதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. 

இதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து தமிழக அரசு அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் படித்தவருக்கு தகுந்த அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனிதாவின் குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியபோது அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். 

இதைதொடர்ந்து திமுக சார்பில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் காசோலையை அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வழங்கினார். 

மேலும் கி.வீரமணி அனிதாவின் குடும்பத்தினரிடம் ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். 
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அனிதாவின் குடுபத்தினருக்கு ரூ. 50 ஆயிரம்  நிதியுதவியும் வழங்கினார்.