தேர்தல் செலவுகளுக்கு பணமின்றி தேமுதிக வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லவும், பிற தேவைகளுக்கான செலவுகளுக்கும் பணத்தை விரைவாக அனுப்பி வைக்க தலைமையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர். 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீசும், வடசென்னை தொகுதியில் மோகன்ராஜ், விருதுநகரில் அழகர்சாமி, திருச்சியில் மருத்துவர் இளங்கோவன் ஆகியோர் தேமுதிக வேட்பாளராக களமிறங்கி உள்ளனர்.

 

பொதுவாக தேமுதிகவில் ஒருசிலரைத் தவிர நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிகம். வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் தேர்தலில் பணம் செலவழிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள். அதே நிலை மக்களவை தேர்தலிலும் எழுந்துள்ளது. தேமுதிக சார்பில் களமிறங்கு நால்வரில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷை தவிர மற்ற மூவரும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் திருச்சியில் களமிறங்கும் டாக்டர் இளங்கோவன் கடனாளியாக உள்ளார்.

 
 
இதனால், மற்ற மூவரும் பணமின்றி தவித்து வருகின்றனர். கூட்டணி கட்சியினர் இந்த மூவரையும் பணம் கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆகையால் தேமுதிக தலைமை பணம் தரும்  என அவர்கள் காத்திருக்கின்றனர். ஆனாலும் கட்சித் தலைமையிடம் இருந்து இன்னும் நம்பிக்கையான பதில் கிடைக்காததால் தவித்துக் கிடக்கின்றனர். தேமுதிக வேட்பாளர்களை அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக- பாஜக நிர்வாகிகள் கண்டு கொள்ளாமலும் , பண உதவிகளை வழங்காமலும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.