விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மஸ்தானுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம்,  செஞ்சி தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.எஸ்.மஸ்தான். இவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம்  தன் தொகுதியில் ஊரடங்கு தொடங்கியது முதலே தினமும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் தொல்லை இருந்து வந்துள்ளது. 

இதனையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, உடன் சென்ற அவரது மனைவி, மகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிவு வெளியானதில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே செஞ்சியில் உள்ள கே.எஸ்.மஸ்தானின் வீடு உள்ள பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏவுடன் தொடர்பில் இருந்த திமுக ஒன்றிய செயலாளர்கள் 3 பேர், மஸ்தான் குடும்பத்தினர், கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள் உட்பட 25 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு மஸ்தான் எம்.எல்.ஏ.,வின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது மருத்துவர்களிடம் விசாரித்ததில் எம்.எல்.ஏ.,வின் மருத்துவ அறிக்கைகள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.