வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பொதுச் சின்னம் கேட்டு டிடிவி தினகரனின் அமமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை என்பதால், பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்தது. ஆனால், அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்க பரீலிக்குமாறு கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் பொதுச் சின்னமாக ஒதுக்கியது. அதுவும் வேட்புமனு தாக்கல் முடியும் நாளில் இந்தச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.


தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்ட அமமுக, படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் வேலூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அமமுக தேர்தலில் போட்டியிடாது என்று தினகரன் அறிவித்தார். அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யும் பணிகள் நடைபெறுவதாலும், பொதுச் சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தினகரன் அறிவித்தார்.

 
 தற்போது வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் 18 சுயேட்சைகள் உள்பட 28 பேர் களத்தில் இருக்கிறார்கள்.  திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைத் தவிர்த்து பிற வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதில் சுகுமார் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாகவே அமமுகவினர் கருதப்பட்டார்கள். எனவே சுயேட்சை சின்னத்திலிருந்துதான் பரிசு பெட்டகத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தற்போது அமமுக போட்டியிடததால், சுயேட்சை சின்னம் பட்டியலில் பரிசு பெட்டகம் இருந்தது. அதிலிருந்துதான் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தலில் தினகரன் கட்சியினர் போட்டியிடாவிட்டாலும், அவரால் பிரபலமான பரிசுப் பெட்டகம் சின்னம் தேர்தலில் போட்டியிடப் போகிறது.