பொதுக் குழுவில் இருந்து வெளியே செல்லுங்கள்..! அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேடையில் அமர துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கிழே இறங்கி சென்றார்.
பொதுக்குழுவில் பதற்றம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் சற்று முன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழு அரங்கிற்கு ஓபிஎஸ் வந்த போது சிலர் ஒழிக என கோஷம் எழுப்பினர், பதிலுக்கு ஓபிஎஸ் வாழ்க என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவியதால், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கேட்டுக்கொண்டார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாடலை மேற்கோள் காட்டி யார் தடுத்தாலும் எம்.ஜி.ஆரின் குரல் ஓங்கி ஒலிக்கும் என கூறினார். எனவே தயவு செய்து அமைதியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அமைதியாக இருக்க வலியுறுத்தல்
இந்தநிலையில் மேடையில் முதல் வரிசையில் சில இருக்கைகள் காலியாக உள்ளது ஓபிஎஸ் பொதுக்குழு அரங்கிற்கு உள்ளே வந்துவிட்டார் ஆனால் மேடையில் அமரவில்லை, அப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர். அப்போது மேடையில் இருந்த மைக்கில் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இருந்த போதும் பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகிறார்கள், அதிமுக என்று சொன்னால் கடமை தவறாத கண்ணியமான தொண்டர்கள் என்ற நற்பெயர் இருந்தது எனவே தயவு செய்து அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என வைகைசெல்வன் வேண்டுகோள் விடுத்தார்.