முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று 87-வது பிறந்தநாளும். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக, தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த மன்மோகன் சிங், நரசிம்மராவ் ஆட்சியின் போது நாாட்டின் நிதியமைச்சராக இருந்தார். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோதுதான் 1991-ம் ஆண்டில் நாட்டில் தாராளமயமாக்கல் கொண்டுவரப்பட்டு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியது.

மிகச்சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங் 5ஆண்டுகாலம் நிதியமைச்சராக இருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டது. அதன்பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மன்மோகன் சிங் பிரதமராக 10 ஆண்டுகள் செயல்பட்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று 87-வது பிறந்தநாள் என்பதால் கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் வாழ்த்துத் தெரிவி்த்து வருகின்றனர். பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘‘எனக்காக எனது குடும்பத்தினர் இந்த ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளனர். 87-வது பிறந்தநாள் கொண்டாடும் மன்மோகன் சிங்கிற்கு எனது வாழ்த்துகள். அவர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வேண்டும்.நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார சரிவுக்கு யாராவது வழி சொல்வதற்கு சரியானவர் மன்மோகன் சிங் மட்டும்தான். தயதுசெய்து மன்மோகன் சிங் கூறும் தீர்வை இந்த அரசு கேட்க வேண்டும்.’’ எனத் தெரிவித்துள்ளார்