மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்த அனைத்து முடிக்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு. கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட முதல் கட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்து இருந்தது.


கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசே ஒப்புக்ககொண்டுள்ளது. 

சரி அடுத்த நிதியாண்டிலாவது வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எதிர்பார்த்தால், நம் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் பொருளாதார நிபுணர்கள் ஒரு தகவலை தெரிவித்துள்ளனர். 2020-21ம் நிதியாண்டில் சிறந்த சூழ்நிலை நிலவினாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்துக்கு மேல் தாண்ட வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முன்னாள் தலைமை புள்ளியியலாளர் புரோனோப் சென் இது குறித்து கூறுகையில், பட்ஜெட்டில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை பொறுத்துதான் பொருளாதார மறுமலர்ச்சி இருக்கும். 

குறைந்த வரி விகிதங்கள் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைப்பதும் வளர்ச்சியை பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 

தேவையை விரைவாக அதிகரிக்கும் மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள்தான் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தேவை. 2020-21ம் நிதியாண்டில் சிறந்த சூழ்நிலை நிலவினாலும் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு மேல் தாண்ட வாய்ப்பில்லை என தெரிவித்தார்.