Asianet News TamilAsianet News Tamil

அனைத்து மாநில முதல்வர்களையும் ஒன்று திரட்டுங்கள். மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலினை கொம்பு சீவும் அன்புமணி.

சமூக அநீதியின் சின்னம் நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடும் பாதிப்பு நீட் தேர்வுக்கு விலக்கு பெற மாநில முதலமைச்சர்கள் கூட்டணியை உருவாக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கும்படி  நீதியரசர் ஏ.கே. இராஜன் குழுவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 


 

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.
Author
Chennai, First Published Jun 22, 2021, 11:38 AM IST

சமூக அநீதியின் சின்னம் நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடும் பாதிப்பு, நீட் தேர்வுக்கு விலக்கு பெற மாநில முதலமைச்சர்கள் கூட்டணியை உருவாக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கும்படி  நீதியரசர் ஏ.கே. இராஜன் குழுவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்; ஒத்த கருத்துடைய மாநில முதலமைச்சர்களின் கூட்டணியை உருவாக்கி நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக  மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்படியும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று  நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களை  பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர்  அன்புமணி இராமதாஸ்  கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக மாண்புமிகு நீதியரசர் ஏ.கே. இராஜன் குழுவுக்கு மருத்துவர்  அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தை நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களிடம் பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு  நேற்று நேரில் தாக்கல் செய்தார்.அந்தக் கடிதத்தின் விவரம்:

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

மாண்புமிகு நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களுக்கு,வணக்கம்! தமிழ்நாட்டில், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் என்ற முறையில், உண்மை நிலையை கண்டறிய தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு - அரசு தெரிவித்த காரணங்கள்

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கானது அல்ல. அது தனியார் பயிற்சி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவற்றுக்கு வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இதை நன்கு உணர்ந்திருந்ததால் தான் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்தவரை அனுமதிக்க வில்லை. அதன்பிறகு 2010-ஆம் ஆண்டு இறுதியில் தான் நீட் தேர்வு முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பது தான் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதன் நோக்கம் ஆகும். நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இவை தான் காரணங்களாகக் கூறப்பட்டன. ஆனால், இந்த இரு நோக்கங்களையும் நிறைவேற்ற நீட் தேர்வு தவறி விட்டது. அதேநேரத்தில் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வு தடுத்து விட்டது என்பது தான் உண்மை. இதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களையும், புள்ளிவிவரங்களையும் நான் பட்டியலிடுகிறேன்.

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

நீட் - மருத்துவக் கல்வித்தரத்தை உயர்த்தவில்லை

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு நீட் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, அந்த ஆண்டில் அரசு கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 2017&ஆம் ஆண்டிலிருந்து தான் நீட் தேர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 150க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர்; 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதைவிடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  ஒரு பாடத்தில் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஒருவரால் எப்படி திறமையான மருத்துவராக செயல்பட முடியும்?

2018-ஆம் ஆண்டிலும் இதே நிலை தான். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வில் இயற்பியல் / வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களும், மைனஸ் மதிப்பெண்களும் எடுத்த 50 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கின்றனர். அவர்களில்    7 பேர் இந்த இரு பாடங்களில் ஏதோ ஒன்றில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்துள்ளனர். 10 பேர் மைனஸ் மதிப்பெண் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்களுக்கு மைனஸ் 25 மதிப்பெண், அதாவது பூஜ்ஜியத்தை விட 25 மதிப்பெண் குறைவாகவும், வேதியியலில் 10 மதிப்பெண்ணும் எடுத்த ஒருவர் உயிரியலில் 185 மதிப்பெண் எடுத்ததால் மொத்தம் 170 மதிப்பெண் எடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார். 720 மதிப்பெண்களுக்கு 110 மதிப்பெண்கள், அதாவது 15.27% மதிப்பெண் பெற்ற மாணவர் மருத்துவம் படிக்க முடியும் என்றால், மருத்துவக் கல்வியின் தரம் எவ்வாறு உயரும்?

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

நீட் - தகுதியை உயர்த்தவில்லை; குறைக்கிறது

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை 12&ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அப்போது இருந்த நடைமுறைகளின்படி   இயற்பியல், வேதியியல், உயிரியல்/ விலங்கியல் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் தான் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கவே முடியும். அவர்களிலும் கூட 97% முதல் 99%  வரை தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் தான் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

ஆனால், நீட் தேர்வில் அப்படியல்ல. 15% மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்கு கோடி கோடியாக பணம் தான் தேவை. உண்மையில் நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும்  தேர்ச்சி பெற 50% குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாடவாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இதன் மூலம் நீட் தேர்வின் நோக்கம்  மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது அல்ல... குறைப்பது, வணிகமயமாக்கப்படுவதை தடுப்பது அல்ல.... ஊக்குவிப்பது என்பது உறுதியாகிறது.

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

நீட் - மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்கவில்லை

நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை. இதையும் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன. 2017-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சுமார் 60,000 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தன. தகுதி அடைப்படையில் பார்த்தால் முதல் 70 ஆயிரம் இடங்களைப் பிடித்தவர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தர வரிசையில் 6 லட்சத்து 23 ஆயிரத்திற்கு பிந்தைய இடங்களைப் பிடித்தவர்களுக்குக் கூட நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல், 2018-ஆம் ஆண்டில் சுமார் 65,000 இடங்கள் இருந்தன. அவற்றில் 7 லட்சத்துக்கு 6 ஆயிரத்திற்கு பிந்தைய இடத்தை பிடித்த பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேநேரத்தில் 50,000-க்கும் முந்தைய இடங்களைப் பிடித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நிறைவுகட்ட மாணவர் சேர்க்கையை  அவற்றின் விருப்பம் போல நடத்திக் கொள்ள அரசு அனுமதிப்பதால் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமும், ரூ. 1 கோடி வரை நன்கொடையும் வழங்கத் தயாராக உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கிறது. அதேநேரத்தில் 720 மதிப்பெண்களுக்கு 450-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் கூட, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை கட்ட இயலாது என்பதால் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர். நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் வரை ஒரு மாணவர் ரூ. 50 லட்சம் வரை நன்கொடை, ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 6 லட்சம் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் செலவில் தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவம் படிக்க முடிந்தது. இந்த நிலையை மாற்றி தகுதியானவர்கள் கட்டணமின்றி  மருத்துவம் படிக்க முடிந்திருந்தால் அது நீட் தேர்வின் வெற்றியாகும். ஆனால், இரண்டரை கோடி ரூபாய் வரை செலவழிக்கும் வலிமை இருந்தால், போதிய மதிப்பெண் இல்லாவிட்டாலும் கூட மருத்துவம் படிக்க முடியும் என்றால், அது எப்படி மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதாகும்?

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

நீட் - கிராமப்புற, ஏழை மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது?

கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வு அத்தகைய வாய்ப்புகளை வழங்கவில்லை. தனிப்பயிற்சி பெறாமல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்பெற்று மருத்துவப் படிப்பில் சேருவது என்பது சாத்தியமில்லாதது ஆகும். உதாரணமாக 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில்  நீட் தேர்வில் 300-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 14,443 ஆகும். இவர்களில் 8688 பேர் 12-ஆம் வகுப்பை முந்தைய ஆண்டு முடித்த மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் இரு ஆண்டுகள் நீட் தேர்வுக்கு தனிப்பயிற்சி பெற்று, அதன்பயனாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ளோரிலும் 90 விழுக்காட்டினர் தனிப்பயிற்சியால் தேர்ச்சி பெற்றவர்கள் தான்.

தமிழ்நாட்டில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களில் 50%க்கும் கூடுதலானோர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். அதேபோல், அரசு பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தான் 400&க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

நீட் - சமூக அநீதி

நீட் தேர்வுக்கு தனிப்பயிற்சி பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ 2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும். கிராமப்புற மாணவர்களாலும், ஏழை மாணவர்களாலும் அது சாத்தியமில்லை. அதே போல், நீட் தேர்வில் கேட்கப் படும் பெரும்பான்மையான வினாக்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து தான் கேட்கப்படுகின்றன. இதுவும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு எதிரான அம்சம் ஆகும். எந்த  வகையில் பார்த்தாலும் நீட் தேர்வு கிராமப்புற, ஏழை, அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்கவில்லை என்பதால் அத்தேர்வு நீடிப்பது சமூக அநீதி ஆகும்; அதற்கு விலக்கு பெற்றாக வேண்டும்.

நீட் - சட்ட அங்கீகாரம் இல்லை

நீட் தேர்வுக்கு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நீட் தேர்வு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் தான் அத்தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு கூறுவது பிழையானது ஆகும். 2011-ஆம் ஆண்டில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 2012 முதல் அது நடத்தப்படுவதாக இருந்தது. பின் 2013-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதே ஆண்டில் நீட் தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அதை எதிர்த்து அப்போதைய   ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு ரத்து என்று ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு அவசர கதியில் வழங்கப்பட்டது என்றும், நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்கப்படும் என்று 11.04.2016 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பு வெறும் 4 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதிலும் கூட வழக்கு விவரங்கள் குறித்த பத்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் வெறும் 4 வரிகள் மட்டுமே இருக்கும். அதிலும் கூட நீட் தேர்வை ரத்து செய்து 2013-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பை செல்லாது என அறிவித்ததற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்கும் போது, அது பற்றி விவாதிக்கப்படும் என்று நீதிபதி அனில் தவே தலைமையில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஆர்.கே. அக்ரவால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு அறிவித்தது. அதன்பின் இப்போது வரை ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தீர்ப்பளித்த 5 நீதிபதிகளும் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், இன்று வரை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் மட்டும் நீட் தேர்வை மத்திய அரசு தொடருவது சமூக நீதி அல்ல என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு.

Gather all the State Chief Ministers together. against NEET Examination ... Anbumani Ramadass Ideo to stalin.

நீட் - தமிழக அரசு அடுத்து செய்ய வேண்டியது என்ன?

எனவே, ஏழை, கிராமப்புற, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பைப் பெற வேண்டும்.

இந்தியாவில் பல மாநிலங்கள், குறிப்பாக தென் மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. அம்மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான கூட்டணியை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும்  திறமையான மூத்த வழக்கறிஞரை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் நோக்குடன் உரிய புள்ளி விவரங்களுடன்  தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவை உட்பட நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்  அரசுக்கு பரிந்துரைக்கும்படி மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios