அரசியலில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது, தென்னக நதிகளை இணைப்பது குறித்த நடிகர் ரஜினிகாந்தின் உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்றும், ஆட்சியைப் பிடிப்பார் என்றும் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலரும், அரசியலுக்கு வர வேண்டாம் என்று சிலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, சந்தேகத்துக்கிடமின்றி நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், எந்த சந்தேகமும் இல்லாமல் ரஜினி, ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றும் தமிழருவி மணியன் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் நுழைவது மக்களுக்கு சேவையாற்றவே தவிர, பணம் சம்பாதிக்க அல்ல என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்தார். 

கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி தருவது உள்ளிட்டவை அவரது உறுதிமொழிகளில் முக்கிய இடம்பிடிக்கும் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.