லஞ்ச ஒழிப்புத்துறையின் சமகால அதிரடிகளில் மிகப்பெரிய ஆக்‌ஷனாக போற்றப்படுகிறது, கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்த கணபதியை கையும், களவுமாக பிடித்து, தூக்கி ஜெயிலில் போட்டுள்ள விவகாரம்.

அப்பல்கலை நிர்வாக திறன்மையின்மையால் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தபோதுதான் கணபதி பதவியேற்றிருக்கிறார். அவரிடம் பெரிய அளவிலான நேர்மை நடவடிக்கைகளை பல்கலை மாணவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் கணபதியோ வக்கனையாக ஒவ்வொரு விஷயத்திலும் பணம் பண்ண துவங்கியிருக்கிறார்.

அதிலும் எழுபத்து ரெண்டு பேராசிரியர்கள் பணி நியமன விஷயத்தில் ரூல்ஸையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தலைக்கு முப்பது லட்சம் முதல் நாற்பது லட்சம் வரை வாங்கிக் கொண்டு சகட்டுமேனிக்கு வேலை கொடுத்திருக்கிறார் கணபதி. இவரின் இந்த அராஜக நடவடிக்கையால் கொத்துக் கொத்தாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

பணி வாய்ப்பு கிட்டாத தனி நபர்கள் ரோட்டில் நின்று போராடியபோது, பல்கலையில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் போராட்டத்தில் இணைந்து ஆதரவு தந்திருக்கின்றனர்.

அந்தளவுக்கு மிக மோசமான பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் கணபதி.

துணைவேந்தர் இப்படி வசூலில் துவைத்து காயப்போடுவது பற்றி உயர்கல்வி அமைச்சகத்துக்கு புகார் சென்றபோது ‘பத்து கோடி ரூபாய் கொடுத்து பதவிக்கு வந்திருக்கிறார். அப்போ அதை எடுக்கும் வகையில் கல்லா கட்டத்தானே செய்வார்?’ என்று நக்கலாக பதில் வந்ததாம். அன்றிலிருந்து துணைவேந்தரை ‘கல்லா’ கணபதி என்றே கிண்டலாக அழைக்க துவங்கியதாம் பல்கலை.

இந்த நிலையில் ஊழலே உருவாக துணைவேந்தர் பதவியில் அமர்ந்திருந்த கணபதி கைதானதும், பல்கலையில் பயிலும் மாணவர்கள்  அவர்களின் வீட்டருகே பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.

அக்கம்பக்கத்தினர் ஏன் கொண்டாட்டம்? என்று கேட்டபோது, மொபைலில் இருந்த துணைவேந்தரின் படத்தை காட்டி ‘எங்க யுனிவர்சிட்டியை உடைச்சு தின்னுட்டிருந்த இந்தாளை இன்னைக்கு ஜெயில்ல தூக்கி போட்டுட்டாங்க’ என்று கூத்தாடினார்களாம்.

ஒரு துணைவேந்தருக்கு இதைவிட அசிங்கம் வேறென்ன வேண்டும்?!