கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் இதுவரையில் மூன்று முறை நேரில் சந்தித்துவிட்டார் கமல்ஹாசன். இரண்டு முறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே நேரில் சென்று நின்று ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகள் தந்தார். நேற்று சென்னை ரயில் நிலையத்தில் விவசாயிகளை சந்தித்தபோதும் இந்த கஜா பிரச்னை பற்றி பேசினார். 

இது போக அரசாங்கமே கடுப்பாகுமளவுக்கு தொடர்ந்து அறிக்கைகள் விட்டும் உஷ்ணத்தை மெயின்டெயின் செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்தோ தமிழகத்தை சேர்ந்த ஏழெட்டு மாவட்டங்கள் கஜா புயலால் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகியும், குறிப்பாக டெல்டாவானது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுவிட்ட நிலையிலும் இதுவரையில் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. வெறும் அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார். 
 
அதேநேரத்தில் 2.0 ப்ரமோஷனுக்காக ஆந்திராவுக்கும், நடிகர் அம்பரிஷ் மரணத்துக்காக கர்நாடகாவுக்கும் அவர் பறந்தது பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்த சூழலில் பேட்ட படத்துக்கு அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறாராம் ரஜினி. இந்நிலையில் தன் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்துப் பேசியிருப்பவர், “ நடிப்பை பொழுதுபோக்காகதான் நான் நினைக்கிறேன். தொழிலாக அல்ல. தொழிலாக நினைத்தால் நடிப்பு எனக்கு சுமையாகிவிடும். அரசியல் என்பதும் மிகப்பெரிய விளையாட்டு, ஆபத்தானதும் கூட. அதனால் மிக கவனமாகவும், நிதானமாகவும் அரசியலை விளையாடி வருகிறேன்.” என்று பேட்டி தட்டியுள்ளார். 

அரசியலை விளையாட்டு என்று ரஜினி உருவகப்படுத்தி இருப்பதும் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. விளையாட்டாய் நினைப்பதால்தான் ஸ்டெர்லைட் மக்களின் சோகம் அன்று அவருக்கு புரியவில்லை, டெல்டா மக்களின் சோகம் இன்று  ரஜினிக்கு புரியவில்லை! என்று கொதிக்கிறார்கள் விமர்சகர்கள். இதற்கிடையில், ’சாவின் விளிம்பை தொட்டு, அநாதைகளாகவும், சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும் ஆகிவிட்ட எங்களை சந்திக்க வராத நீங்களா எங்களை ஆள முயல்வது? உன்  கனவிலும் பலிக்காது அந்த நினைப்பு.’ என்று டெல்டாவிலிருந்து ரஜினிக்கு எதிராக கணிசமான குரல்கள் பொங்குகின்றன.