நாகப்பட்டினத்தில் கஜா புரட்டி எடுத்த  பகுதிகளை ஒருவழியாக பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு மனிதாபிமனத்தோடு, மனசாட்சிப்படி வழங்கும்.’என்று உருக்கமாக ஒரு ஸ்டேட்மெண்டை தட்டினார். 

இதைத்தான் பிடிபிடியென பிடித்துக் கொண்டுள்ளனர் அரசியல் விமர்சகர்கள். காரணம்? அவர்களே கூறட்டும்... ”புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு சோறு, குடிநீருக்கு நிகராக உடைகளும் அவசியம். கூடவே போர்த்திப் படுக்கவும், கடும் குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும் போர்வைகளும் அவசியம். இந்த அடிப்படையில் போர்வைகளை மொத்தமாக கொள்முதல் செய்கிறது தமிழக அரசு. இதில்தான் ஊழல் மலிந்துள்ளது.

 

அதாவது, ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்களிடம் தரமான போர்வைகளை வாங்காமல், தனியாரிடம் தரம் குறைந்த போர்வைகளை வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட ஏழு லட்சம் போர்வைகள் வாங்கிட முடிவு செய்து இதுவரையில் மூன்றரை லட்சத்துக்கு மேல் வாங்கிவிட்டார்கள். இதில் முக்கால்வாசிக்கும் மேல் தனியாரிடம் தான் வாங்கியுள்ளனர். 

அது மட்டுமில்லாமல் போர்வையை மலிவான விலைக்கு வாங்கிவிட்டு அதைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகமாக்கி பில் போட்டு அரசு பணத்தை கையாடல் செய்கிறார்களாம். உதாரணத்துக்கு ஒரு பெட்ஷீட்டின் விலை நூறு என்றால், இவர்களோ நூற்று ஐம்பது ரூபாய் வரை பில் போடுகிறார்களாம் போலியாக. அரசாங்கத்துக்கு போர்வை வாங்கிக் கொடுக்கும் டெண்டரை எடுத்திருப்பது ஆளுங்கட்சிக் காரர்களே. 

ஒரு போர்வைக்கு ஐம்பது ரூபாயென்றால் ஏழு லட்சம் போர்வைக்கும் சில கோடிகளில் ஊழல் நடக்கிறது. இந்த பணத்தில் அதிகாரிகளுக்கும் கட்டிங் போவதால் அவர்களும் வாய் மூடி இதை ஊக்குவிக்கிறார்கள். வெறும் பெட்ஷீட்டில் மட்டும் இந்த சுருட்டல் நடைபெறவில்லை. நிவாரணம் எனும் அரசு வாங்கும் எல்லா பொருட்களிலுமே இந்த முறைகேடுகள் நடப்பதாய் தெரிகிறது. 

கஜா புயலில் பாதிக்கப்பட்டு கிடக்கும் நபர்கள், ஐ.சி.யூ.வில் உயிர் இழுத்துக் கொண்டிருக்க கிடக்கும் நபர்களுக்கு சமம். அவர்களின் பணத்தில் போய் கைவைப்பதென்பது பிணற்றின் நெற்றிக் காசை திருடும் கதையல்லவா? இப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசு மட்டும் மனிதாபிமான, மனித நேயம், மனசாட்சி எல்லாம் பார்த்து பார்த்து உருகி நிதியை கொடுக்க வேண்டுமா? அவர்கள் உருகி கொடுக்கும் நிதி, இவர்கள் ஊழல் செய்வதற்கா?” என்று விளாசியிருக்கின்றனர். என்னத்த சொல்ல!