குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள பெங்களூரு ரிசார்ட்டில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூரில் வேடிக்கை பார்த்து ஏன் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வரும் 8 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜக வெற்றி பெற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், பாஜகவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாவிவிடலாம் என்ற அச்சத்தின்பேரில் 44 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் பாதுகாக்கும் அமைச்சர் சிவகுமார் வீட்டிலும், ரிசார்ட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஆனால், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டபோது வருமான வரித்துறையினர் வேடிக்கை பார்த்தது ஏன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரியில், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், முதலமைச்சர் போட்டியிடுவதற்காக தன் பதவியில் இருந்து விலகினார். உடனே அவரது வீட்டுக்கு சென்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

தமிழகத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சில வாரங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளார். ஆனால், இது குறித்தெல்லாம் வருமான வரித்துறைக்கு எந்த சந்தேகமும் எழுவதில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பாஜகவின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தும் போக்கினை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.