“மக்கள் படை திரளட்டும்; மத்திய - மாநில அரசுகள் நடுங்கட்டும்!”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறவுள்ள போராட்டங்களில் பங்கேற்றிட அறவழியில் ஆயத்தமாகும்படி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் போராட்ட அழைப்பு மடல்.

தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகத்தையும், மாநில அரசின் அடிமைத்தனத்தையும் கண்டு பொதுமக்கள் கடும் சினம் கொண்டுள்ளதை எந்தப்பக்கம் திரும்பினாலும் உணர முடிகிறது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறலாமா என மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி வருகிறது. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தக்கெடு முடியும்வரை வாரியத்தை அமைக்க முன்வராமல், கெடு தேதி நிறைவடைந்தபிறகு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வாரியம் என்ற வார்த்தைக்குப் பதில் “ஸ்கீம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு என்ன பொருள் எனக் கேட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையுடன் சித்து விளையாட்டு நடத்துகிறது.

இதற்கு முன், பலமுறை உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெளிவாக எடுத்துக்கூறி வாதாடியிருக்கும் மத்திய அரசு, இந்தமுறை ஸ்கீம் என்ற வார்த்தையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பதே தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான ஸ்கீமாகத்தான் தெரிகிறது. மத்திய அரசின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து நின்று, காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டிய அ.தி.மு.க. அரசு, மத்திய அரசு மனு தாக்கல் செய்யும் வரை காத்திருந்து, அதன்பின் பெயரளவுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது. அதில்கூட அழுத்தமான காரணங்களை எடுத்து வைக்க மாநில ஆட்சியாளர்களுக்கு தெம்பும் திராணியுமில்லை.

காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் காரணங்களுக்கும் இடம்தராமல் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப எதிர் கட்சியான தி.மு.க பல முயற்சிகளை மேற்கொண்டும், மாநிலத்தை ஆள்பவர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதால், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. வஞ்சகத்தை முறியடித்து உரிமையை நிலைநாட்டி, நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் காவிரி டெல்டா பகுதிகள் மீண்டும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், கழக தலைமைச் செயற்குழு கூட்டம் கடந்த 30ந் தேதி கூடியது. அதில், சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 1ந் தேதியன்று, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டு, ஒருங்கிணைந்த முறையிலே முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு, காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்திருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் முக்கிய விவரங்களை கழக உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட வேண்டியது உங்களில் ஒருவனான என்னுடைய கடமை.

“ஸ்கீம்” என்பதே “மேலாண்மை வாரியம் அமைப்பதுதான்” என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்தும், கர்நாடக தேர்தல் லாபத்திற்காக புரியாதது போல் கபட நாடகமாடிக் கொண்டிருக்கிறது. 1956-ஆம் ஆண்டின் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தில், ”சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு: 6A(2)ன்படி, “ஸ்கீம்” என்பது “ஆணையம்” (Authority) என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, “ஆணையம்” என்பதை உள்ளடக்கிய ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மத்திய அரசுக்கு இட்டிருக்கும் கட்டளை.

அதுமட்டுமின்றி, காவிரி இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த “பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம்”, போல் அமைக்க வேண்டும் என்ற நடுவர்மன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருப்பது மட்டுமின்றி, தீர்ப்பின் பக்கம் 337-ல் உள்ள பத்தி 290-ல் “நடுவர்மன்றம் சுட்டிக்காட்டிய காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும் அதன் விவரங்கள், கூட்டங்கள் நடத்தும் முறை ஆகியவை” பற்றியும் உச்சநீதிமன்றமே விளக்கிக் கூறியிருக்கிறது.

ஆகவே, காவிரி நடுவர்மன்றத்தால் உத்தரவிடப்பட்ட “காவிரிமேலாண்மை வாரியத்தை” உச்ச நீதிமன்றம் அய்யம் திரிபற ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை மறுத்து, வேண்டுமென்றே இதுவரை தாமதம் செய்து, தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது “விளக்கம் கேட்கிறோம்” என்ற பெயரில் “மூன்றுமாத கால அவகாசம்” கோரியும், “நடுவர் மன்றம் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாறாக வேறு ஒரு ஸ்கீமை மத்திய அரசு உருவாக்கலாமா” என்றும், தமிழகத்தின் காவிரி உரிமையை அடியோடு நீர்த்துப்போக வைக்கும் விளக்கத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது.

இது விளக்கமல்ல, விதண்டா வாதம். குறிப்பாக, “கர்நாடாகாவில் தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த ஸ்கீமை உருவாக்கினால் கலவரம் வரும்”, என்று மத்திய அரசே கற்பனை செய்துகொண்டு உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. “கர்நாடக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம்” என்று தலைமைத் தேர்தல் ஆணையரே அறிவித்து விட்டபிறகு, அதே காரணத்தை உச்ச நீதிமன்றத்திடம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கூறி முறையிடுகிறது.

தமிழகத்தை வஞ்சிப்பதையே மத்திய பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. பா.ஜ.க.வின் சொந்த தேர்தல் லாபத்திற்காக குறுகிய அரசியல் நோக்கத்தோடு, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நசுக்குவதுடன், மத்திய அரசு தனது மேலாண்மை அதிகாரத்தையும் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்புக்குள்ளாக்கும் இப்படியொரு அசாதாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் பாஜக அரசு மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகிய சிக்கல்களில் இருந்து, பா.ஜ.க. அரசை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, “பாராளுமன்ற ஆர்ப்பாட்டம்” எனும் ஓரங்க நாடகத்தை அதிமுக நடத்தியது. அ.தி.மு.க.வின் ஐம்பது எம்.பி.க்கள் இருந்தும் மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாமல், அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருப்பது எல்லாம் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழக சரித்திரத்தில், இதுவரை காணாத துரோகம் செய்வதை உறுதி செய்கிறது.

-என இப்படி மத்திய - மாநில அரசுகளின் வஞ்சகத்தை விலாவாரியாக விளக்கி, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுக்க வேண்டிய தொடர் போராட்டங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தில் விளக்கப்பட்டுள்ளது.

“முதல்கட்டமாக வருகின்ற 2018, ஏப்ரல் 5ஆம் தேதியன்று, மாநிலம் தழுவிய “பொது வேலை நிறுத்தம்” நடத்துவது எனவும், மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த பொதுவேலை நிறுத்தப்போராட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தொழிற் சங்கங்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து, நமது மாநில வாழ்வாதார பிரச்சினைக்குத் துணை நிற்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன்;

அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்து கட்சி தலைவர்களும் – அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கெடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி, “காவிரி உரிமை மீட்புப் பயணம்” மேற்கொள்வதென்றும்;

தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே நடுவர் மன்றம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், “கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது;

தி.மு.கழகத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் நிறைவடைந்த உடனேயே போராட்டக் களத்தில் இறங்கி, தீர்மானத்திற்கு செயல் வடிவம் தரப்பட்டது.

“சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்” எனும் தலைவர் கலைஞர் அவர்களின் பொன்மொழிக்கு ஏற்ப, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கழகத் தொண்டர்களுடனும், தோழமைக் கட்சியினருடனும் உங்களில் ஒருவனான நான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானேன்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கழகத்தினரும், தோழமைக் கட்சியினரும், விவசாய அமைப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். சாலை மறியலும், ஆர்ப்பாட்டங்களும் விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்றன. இந்தப் போராட்ட நெருப்பு, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக ஊழித்தீயாக பரவவேண்டும்.

தமிழகத்தின் அடிப்படை உரிமையை மீட்கவும், தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பங்கேற்புடன் அடுத்தடுத்த போராட்டக் களங்களுக்கு கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் தயாராகிவிட்டீர்கள் என்ற செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்படும் நேரத்திலும்கூட சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கழகத்தினர் அணி அணியாகத் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், ரயில் மறியல் செய்வதும் காதுக்கு எட்டுகிறது.

இது, கழகத்தின் தனிப்பட்ட போராட்டமல்ல, தமிழக மக்களின் வாழ்வுரிமைப் போர். அதனால், ஏப்ரல் 5ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கானப் பரப்புரையை விரைந்து மேற்கொண்டு அதில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் என ஒட்டுமொத்த மக்கள் படை கிளர்ந்தெழும் வகையில், அனைவரையும் ஒருங்கிணைத்தும், தோழமைக் கட்சியினர் - பொதுநல அமைப்பினர் ஆகியோருடன் கரம் கோர்த்தும், முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்து மத்திய - மாநில அரசுகளின் முகமூடியைக் கிழித்தெறிந்திட வேண்டும்.

அதன் அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள காவிரி உரிமை மீட்பு பயணம் மற்றும் பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி போராட்டம் ஆகியவற்றையும் பெருந்திரளான மக்கள் ஆதரவுடன், ஜனநாயக உரிமை காக்கும் அறவழியில் நடத்திட ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் படை திரளட்டும்; மத்திய - மாநில அரசுகள் நடுங்கட்டும்!