தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளி மாலை முதல் திங்கள் காலை வரை நீட்டிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துகொண்டே உள்ளது.

சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த தலைமைச் செயலாளர் பிரதமருடன் பேசியவை தொடர்பாக விளக்கினார். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் சேர்த்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளி மாலை முதல் திங்கள் காலை வரை நீட்டிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.