மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பரவிய தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25–ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்துக்கு தடை, பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து மூடப்பட்டன. அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் அன்லாக் என்ற பெயரில் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது போலியான தகவல் என்றும், இனிமேல் லாக்டவுன் அமல்படுத்தப்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.