from today midnight ineternet service will be continue in thoothukudi

தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் இணையதள சேவை தொடங்கும் என . டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய நிலையில் அப்பாவி பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.

துப்பாக்கி சூடு நடந்த நாட்களில் வதந்திகள் பரவாமல் தடுக்க தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் மீண்டும் இண்டர்நெட் சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கு ஏற்ப காவல்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அமைதியை நிலைநாட்ட மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்றும் செய்தியாளர்களிடம் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கக் கூடியது என்றும் கூறினார். தற்போது தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதையடுத்து இன்று நள்ளிரவு முதல் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்தார்.