மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட்  மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு  தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பெரும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு கொஞ்சம் கூட இரக்கம் காட்டாததால் தமிழகம் அனிதா என்ற இளம் மாணவியை இழந்தது.

தற்போது மருத்துவப் படிப்புக்கு நீட் அவசியம் என்றாகிவிட்ட நிலையில், தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் நடத்தப்படுவதால், ஏற்கனவே தோல்வி அடைந்தவர்கள்  ஓர் டென்ஷனுடன் காக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில்  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய  அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்வுகளை புதிதாக கட்டமைக்கப்பட்ட தேசிய தேர்வு நிறுவனம் எனும் நிறுவனம் நடத்தும் எனவும் அப்போது அவர் கூறினார். ஆண்டுக்கு  இருமுறை என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜெ.இ.இ தேர்வும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வும் நடத்தப்படும் எனவும் மத்திய  அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இரண்டு தேர்வுகள் மட்டுமின்றி, யு.ஜி.சி , நெட் மற்றும் சி.எம்.ஏ.டி ஆகிய தேர்வுகளும் தேசிய தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.